Wednesday, October 30, 2019

இதுவும் கடந்துபோகும்

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கைத் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள் ,
எத்தனை தோல்விகள் ,
எத்தனை மகிழ்ச்சிகள் ,
எத்தனை துக்கங்கள் ...

எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள் ,
எத்தனை பகைவர்கள் ,
எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானது அல்ல.அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

*வெற்றிகள் கிடைக்கும் போது.,

"#இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...கர்வம் தலை தூக்காது.

*தோல்விகள் தழுவும் போது..,

"#இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்...சோர்ந்து விட மாட்டீர்கள்.

*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது.,

"#இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது - அவர்களைக் கௌரவிப்பீர்கள்.அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது..,

"#இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். - தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மன அமைதியை இழக்க மாட்டீர்கள்.

*நெற்றி சுருங்கும் போதெல்லாம்..,

"#இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.- சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

வாழ்க்கையின் ஜீவநாதமாக இந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்.,

அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.........

Sunday, October 13, 2019

சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு

            ஓர் உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்தப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

       அவர் மிகவும் கஷ்டப்பட்டு  அந்தக் கரப்பானைத் தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால், அந்தக் கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

                இதைப் பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையைச் சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்தப் பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையைக் கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதைப் பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

     நான் என் காப்பியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்குக் கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார். எனவே, அந்தப் பெண்களின் நடத்தைக்குக் கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்தக் கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

         இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியைக் குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்தக் குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது.

              இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது, பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர. அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது.

           கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையைக் கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!... அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!

Thursday, October 10, 2019

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

கோல மூடா/யான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

அன்புடன்,

கோல மூடா/யான் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டு மன்றம்